உப்பு குறைப்பு இயக்கம் முதல் டெங்கு ஒழிப்பு வரை: அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்
சென்னை: உப்பு குறைப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். சட்டப்பேரவையில் இன்று பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், “ இன்று சுகாதாரத்துறை சார்பாக இரண்டு அறிவிப்புகளை வெளியிடுகிறேன். இதுவரை மருத்துவத் துறை, ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை, நோய் வந்த பிறகு, அதனை குணப்படுத்தும் நோக்கில் தான் முதன்மையாக கட்டமைக்கப்பட்டிருந்தன.
வரும் முன் காப்பதே சிறந்தது என்ற வகையில் சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும் வகையில், மக்களின் அன்றாட உணவில் உள்ள உப்பின் அளவை குறைக்கும் வகையில் மாநில அளவிலான இயக்கம் ஒன்றை அமைக்க இந்த அரசு முன் வந்துள்ளது. ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் தொடும் எளிய பொருள் உப்பு ஆகும். அதே வகையில் மக்கள் அனைவரின் நலனையும் தொட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகும் திட்டம் இந்த உப்பிலிருந்தே தொடங்குகிறது.
உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் என தொற்றா நோய்கள் தமிழகத்தில் மிக முக்கிய சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளன. தமிழகத்தில் மருத்துவ சான்றளிக்கப்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய 50 சதவீதம் இதயம் மற்றும் ரத்தக் குழாய் நோய்களால் நிகழ்கிறது. தமிழகத்தில் தோராயமாக ஒரு கோடியே 80 லட்சம் மக்கள் உயர் ரத்த அழுத்த நோயுடன் வாழ்கின்றனர். இந்த நோய்க்கு உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்குகிறது. ஆனால், தமிழக மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7-8 கிராம் உப்பை உட்கொள்கின்றனர். தென்னிந்திய உணவு முறையில், நாம் உட்கொள்ளும் உப்பில் 88% வீட்டு சமையல் மூலம் சேர்க்கப்படும் உப்பிலிருந்தே வருகிறது. ஒருநாளைக்கு உட்கொள்ளும் ஒரு கிராம் உப்பை குறைத்தாலும் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்து இதய நோய் இறப்புகளில் 7 சதவீதமும், பக்கவாத இறப்பில் 10 சதவீதமும் குறையும்.