இலவச பேருந்து பயணம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்
சென்னை: அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ‘ஏஐ’ சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்க ரூ.30 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு கொண்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும், அவர்களுடன் துணைக்குச் செல்லும் ஒருவரும் சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது அரசுப் போக்குவரத்து கழகங்களின் மாநகர மற்றும் நகர சாதாரண பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், எல்எஸ்எஸ், டீலக்ஸ் (குளிர்சாதனப் பேருந்துகள் நீங்கலாக) மற்றும் புறநகர், மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளுக்கும் இலவச பயண அனுமதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த சலுகையைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், தமிழக அரசால் வழங்கப்பட்ட 16 இலக்க எண் கொண்ட அடையாள அட்டையை (யுடிஐடி) நடத்துநரிடம் காண்பித்து பேருந்து களில் பயணிக்கலாம்.
இத்திட்ட விரிவாக்கத்துக்காக முதல்கட்டமாக ரூ.7.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏஐ உபகரணங்கள்
மாற்றுத் திறனாளிகள் தற்சார்புடன் வாழும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த மேம்பட்ட நவீன உபகரணங்கள், விளையாட்டு செயற்கை உறுப்புகள் போன்றவற்றை வாங்கும்போது அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உபகரணங்களின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை (இதில் எது குறைவோ, அந்த தொகை) நிதியுதவியாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், அரசு மருத்துவரின் பரிந்துரையைப் பெற்று உபகரணங்களை கொள்முதல் செய்த 60 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.