இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரதமர் மோடி, தாரிக் ரஹ்மானைத் தொலைபேசியில் அழைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ள பி.என்.பி. கட்சி, இந்தியாவுடனான உறவு குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் வங்கதேசத்தின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே அமையும் எனவும் , இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் சமநிலை உறவைப் பேணவே விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.