“இந்தியா மற்றொரு போருக்கு தயாராகிறது... பேச்சுதான் தீர்வு”
இஸ்லாமாபாத்: இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பேச்சுவார்த்தைக்கு முன்வர அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருகிறது. மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக அந்நாட்டு தலைவர்கள் கூறுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் அமைதிக்காகப் பாடுபடும் நான், இதைப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களுக்கு (இந்தியா) எனது செய்தி என்னவென்றால், போர் உத்திக்கான அறையில் இருந்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மேஜைகளுக்கு வர வேண்டும். அதுதான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கான ஒரே வழி” என்று தெரிவித்தார்.
ஆசிப் அலி சர்தாரியின் உரைக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறு என்று அவர்கள் கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். பெரும் கூச்சலுக்கு மத்தியில் ஆசிப் அலி சர்தாரி தனது உரையை வாசித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கடந்த ஆண்டு மே மாதத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடங்கியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்களுக்கு போர் நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் வேண்டுகோளை ஏற்று இந்தியா சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.