பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை
சென்னை: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 3-ம் தேதி) புதுச்சேரி செல்கிறார். அங்கு பிரச்சாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் அவர் அன்று இரவு, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் காலை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், மதியம் புறப்பட்டு கேரளா செல்கிறார். இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம் பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள், பிரதமர் பயணிக்கும் வழித்தடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஏற்பாடுகளை தவிர 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்களும் இந்த பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.