அன்புமணி, எல்.கே.சுதிஷ், திருச்சி சிவா உட்பட 19 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு
புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த அன்புமணி, எல்.கே.சுதிஷ், திருச்சி சிவா உட்பட 19 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர். மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து ஆறு பேர், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா ஐந்து பேர், ஒடிசாவில் இருந்து மூன்று பேர் என மொத்தம் 19 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தம்பிதுரை (அதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), திருச்சி சிவா (திமுக), எல்.கே. சுதிஷ் (தேமுதிக), கிறிஸ்டோபர் மாணிக்கம் (காங்கிரஸ்), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக) ஆகியோர் தமிழகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் உறுப்பினர்களாக பதவியேற்றனர். மகாராஷ்டிராவில் இருந்து சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி), மாயா சிந்தமான் இவ்னேட்(பாஜக), ராம்ராவ் சக்காரம் வட்குடே (பாஜக), ஜோதி நாக்நாத் வாக்மாரே (சிவ சேனா), மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே (இந்திய குடியரசு கட்சி(அதாவலே)) ஆகிய ஐவர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து பாபுல் சுப்ரியா பரல்(திரிணமூல் காங்கிரஸ்), விஸ்வஜித் சின்ஹா (பாஜக), மேனகா குருசாமி (திரிணமூல் காங்கிரஸ்), ராஜிவ் குமார் (திரிணமூல் காங்கிரஸ்), ருக்மணி மல்லிக் (திரிணமூல் காங்கிரஸ்) ஆகிய 5 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். மேலும், ஒடிசாவைச் சேர்ந்த மன்மோகன் சமல் (பாஜக), சன்ருப்ட் மிஸ்ரா (பிஜேடி), திலிப் குமார் ரே (சுயேட்சை) ஆகிய மூவர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். உறுப்பினர்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மொழியிலேயே உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.