தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம்
சென்னை: தமிழக தலைமைச் செயலாளரை மாற்றியும், பாஜக, ஆர்எஸ்எஸ். ஆதரவாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை (DVAC) தலைமை இயக்குநராகவும் நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு திமுக எம்.பி.யும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். தமிழக தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த என்.முருகானந்தத்துக்கு பதிலாக, சாய் குமாரை தலைமைச் செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்தத் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எவ்விதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை; மேலும், முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அப்பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எவ்விதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை. முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருவதால், தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர் அவரே ஆவார். இத்தகைய சூழலில், 08.04.2026 தேதியிட்ட உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு, மீண்டும் தலைமைச் செயலாளராக முருகானந்தத்தை பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை (DVAC) தலைமை இயக்குநராக (DGP) டாக்டர் சந்தீப் மிட்டலை நியமித்திருப்பதற்கு எங்களின் கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறோம். DVAC-இன் செயல்பாடுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், களங்கமற்ற நேர்மை, நடுநிலைமை மற்றும் எவ்விதக் குறைபாடுகளுமற்ற பணிப்பதிவு ஆகியவற்றைக் கொண்ட ஓர் அதிகாரியை மட்டுமே DVAC-இன் தலைவராக நியமித்திருக்க வேண்டும். டாக்டர் சந்தீப் மிட்டல் பாஜக மற்றும் RSS அமைப்புகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் ஐயம் அல்ல; மாறாக, டாக்டர் சந்தீப் மிட்டல் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், அவரே ஒப்புக்கொண்ட ஒரு உண்மையாகும். பாஜக தலைமையிலானதும், இத்தேர்தல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாகப் போட்டியிடும் அதிமுகவை உள்ளடக்கியதுமான 'தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு' (NDA) ஆதரவாகவே அவர் செயல்படுவார் என்பதில், எங்கள் மனதிலும் தமிழ்நாட்டு மக்களின் மனதிலும் எவ்வித ஐயமும் இல்லை. தனது சித்தாந்தச் சார்புகளைத் தவிர, டாக்டர் மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.