“ஏப்.16, 17, 18-ல் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி” - மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்து பிரதமர் மோடி விவரிப்பு
புதுடெல்லி: கடந்த காலக் கனவுகளை நனவாக்கி, எதிர்கால லட்சியங்களை நிறைவேற்றும் என மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த வாரம் நாடாளுமன்றத்தில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்த விவாதம் நடைபெறவுள்ள நிலையில், இன்று புதுடெல்லியில் நடைபெற்ற பெண் சக்தி வணக்கம் (நாரி சக்தி வந்தன்) கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் நாடாளுமன்றம் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் தருவாயில் உள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கடந்தகால கனவுகளை நனவாக்கும்; எதிர்கால லட்சியங்களை நிறைவேற்றும் ஒரு புதிய வரலாறாகும். சமத்துவமிக்க இந்தியாவுக்கான தீர்மானம் இது. இனி சமூக நீதி என்பது வெறும் முழக்கமாக மட்டும் இல்லாமல், நமது பணி கலாச்சாரம் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையின் இயல்பான ஒரு பகுதியாகத் திகழும்.
2023-ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து, 2029-ஆம் ஆண்டுக்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்ற கூட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மாநிலச் சட்டப்பேரவைகள் முதல் நாட்டின் நாடாளுமன்றம் வரை, பல தசாப்தங்களாக நீடித்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளாகும். இந்தத் தேதிகளில்தான், சட்டத் திருத்தங்களைப் பரிசீலித்து நிறைவேற்றுவதற்காக நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில், புதிய நாடாளுமன்றத்தில், 'நாரி சக்தி வந்தன் சட்டம்' என்ற வடிவில் நாம் முதல் அடியை எடுத்து வைத்தோம். நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் உள்ள இந்தக் குறிப்பிடத்தக்க மைல்கற்களுக்கு மத்தியில், 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றை எடுக்கும் தருவாயில் இந்தியா இன்று நிற்கிறது.
இந்த முடிவு, நமது காலத்தின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகத் திகழும் என்பதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் கூறுகிறேன். இது பெண்களின் அதிகாரமளித்தலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முடிவாகும். இது பெண்மையின் வலிமைக்கும் கண்ணியத்துக்கும் செலுத்தப்படும் ஓர் உண்மையான மரியாதையாகும்.
பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் நிறைவேற்றப்படும்போது, மக்களவை இடங்களின் எண்ணிக்கை 816 ஆக உயருவது உறுதி செய்யப்படும். இதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.