நொய்டா போராட்ட வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்டது உண்மைதான்: தமிழ்நாட்டில் கைதானவர் ஒப்புதல் வாக்குமூலம்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் தொழில் மண்டலங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், நியாயமான ஊதியம், சரியான நேரத்தில் சம்பளம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் கோரி அண்மையில் தொடர் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இந்தப் போராட்டத்துக்கு மூளையாக செயல்பட்டதாக ஆதித்யா ஆனந்த் (எ) ரஸ்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. தலைமறைவான ரஸ்தியைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
காவல் துறையிடம் சிக்காமல் இருக்க அவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பல மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், கவுதம் புத்த நகர் காவல் ஆணையரகம் மற்றும் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை (STF) இணைந்த குழு, ஆதித்ய ஆனந்தைத் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தது
அவரிடம் நடத்திய விசாரணையின் போது, நொய்டாவில் தொழிலாளர் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைக்கான சதித்திட்டத்தில் தனக்கு பங்கு இருப்பதை ஆனந்த் ஒப்புக் கொண்டார். இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள பெரிய வலையமைப்பைக் கண்டறியவும், பிற அம்சங்களை ஆராயவும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.