Select Location
All Locations
State
Region
City / District
“திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை” - சந்திரபாபு நாயுடு

“திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை” - சந்திரபாபு நாயுடு

கோவை: “மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாட்டில் உள்ள பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இது இந்தியாவில் உள்ள பெண்களின் எதிர்காலம் சார்ந்த மிக முக்கியமான விஷயமாகும்” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் கூறும்போது, “நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்த விவாதம் அரசியல் உரையாடல்களின் மையமாகத் திகழ வேண்டும். இது அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சியை நோக்கிய ஒரு மிக முக்கியமான நடவடிக்கை.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையானது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சீர்திருத்தம் ஆகும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் உறுதியான முயற்சியாக இது இருந்தது. அதே வேளையில், இதுபோன்ற முற்போக்குச் சீர்திருத்தங்களை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த இந்தக் கட்சிகளின் நிலைப்பாடு, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், வரலாற்று ரீதியாகவே பல முக்கியச் சீர்திருத்தங்களை எதிர்த்து வந்துள்ளன. தற்போது பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் அதே போக்கை அக்கட்சிகள் தொடர்ந்து வருகிறது.

பெண்களுக்காக பிரதமர் மோடி உருவாக்கியுள்ள இந்த 33 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. ஆனால், காங்கிரஸ், திமுக மற்றும் சில எதிர்க்கட்சிகள் இதை எதிர்ப்பதன் மூலம் பெண்களுக்கு அநீதி இழைத்துள்ளன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது பெண்களின் முன் சென்று மன்னிப்பு கோர வேண்டும். இது வெறும் அரசியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இது இந்தியாவில் உள்ள பெண்களின் எதிர்காலம் சார்ந்த மிக முக்கியமான விஷயமாகும்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொலைநோக்குப் பார்வை அற்றதாக உள்ளது. மோசமான நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியான பிடிவாதம் ஆகியவற்றின் காரணமாக, தமிழகம் தனது வளர்ச்சிக்கான பல வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டது. சீர்திருத்த கொள்கைகளை எதிர்க்கும் கட்சிகளைத் தமிழக வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும். இந்தத் தேர்தல் முற்போக்கு நிர்வாகத்துக்கும், பிற்போக்கு அரசியலுக்கும் இடையிலான ஒன்றாக இருக்கும்” என்றார் சந்திரபாபு நாயுடு.


Hindu Tamil 1 hour ago
Home Flash News