24 ஆண்டுகளாக ‘டபிள்யூடபிள்யூஇ’ வில் கலக்கிய மல்யுத்த ஜாம்பவான் பிராக் லெஸ்னர் ஓய்வு: ரசிகர்கள் சோகம்
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் பிரபல மல்யுத்த போட்டியான ‘டபிள்யூடபிள்யூஇ’ க்கு பல நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக 90‘ஸ் எனப்படும் 90களில் பிறந்தவர்கள் ஒரு காலத்தில் டிவிக்களில் முன்பு அமர்ந்து கொண்டு பைத்தியமாக இந்த போட்டிகளை பார்த்ததுண்டு. மேலும் ராக், படிஸ்டா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் ‘டபிள்யூடபிள்யூஇ’வில் இருந்து சினிமாவிற்கு சென்று அங்கும் ஜொலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மல்யுத்த போட்டியின் முக்கிய நிகழ்வான ‘ரெஸில்மேனியா 42’ லாஸ் வேகாஸில் உள்ள அலிஜியண்ட் மைதானத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. இதில் போட்டியில் 24 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த ‘தி பீஸ்ட்’ என்று அழைக்கப்படும் ப்ராக் லெஸ்னருக்கு எதிராக, இளம் நைஜீரிய வீரரான ஒபா பெமி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். நைஜீரிய வீரரான ஒபா பெமி, மல்யுத்த ஜாம்பவான் லெஸ்னரின் பலமான தாக்குதல்களை முறியடித்ததோடு, தனது அபார உடல் வலிமையால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். போட்டியின் இறுதிக்கட்டத்தில், லெஸ்னரின் முகத்தில் முழங்கால் தாக்குதலைத் தொடுத்து, அவரை நிலைகுலையச் செய்த பெமி, லெஸ்னரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ப்ராக் லெஸ்னர் தனது ஓய்வை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளார்.
போட்டி முடிந்ததும், தனது கையுறைகளை மல்யுத்த வளையத்திற்குள் கழற்றி வைத்த லெஸ்னர், ரசிகர்களை நோக்கிச் சல்யூட் அடித்து விடைபெற்றார். இது மல்யுத்த வீரர்களின் பாரம்பரிய ஓய்வு அறிவிப்பாகக் கருதப்படுகிறது. கடந்த 24 ஆண்டுகளாக மல்யுத்த உலகில் முத்திரை பதித்து வந்த லெஸ்னரின் இந்தப் பயணம் முடிவுக்கு வந்தது உலக ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.