மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: இன்று காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தரிசனம் செய்தனர். அப்போது பெண்கள் புது மாங்கல்ய கயிறு அணிந்து கொண்டனர். திருவிழாவின் 11-ம் நாளான இன்று (ஏப்.29) தேரோட்டம் நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்.30-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். விழாவின் 10-ம் நாளான நேற்று (ஏப்.28) முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதை முன்னிட்டு கோயிலிலிருந்து அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்ட மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதிகளில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினர். திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிலிருந்து புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று அதிகாலையில் கோயிலுக்கு வந்தடைந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஆடி வீதியில் திருக்கல்யாண மேடை 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாண மேடையில் முதலில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை 8.07 மணிக்கு எழுந்தருளினர்.
பின்பு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் காலை 8.09 மணிக்கு எழுந்தருளினார். மீனாட்சி அம்மன் 8.17 மணியளவில் எழுந்தருளினார். பவளக்கனிவாய் பெருமாள் காலை 8.20 மணியளவில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.30 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க விநாயகர் பூஜை ஹோமத்துடன் திருக்கல்யாணம் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். பூஜைக்கு பின்பு காலை 8.43 மணிக்கு சுவாமி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. காலை 8.45 மணியளவில் பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்க்கும் வைபவமும் 8.49-க்கு மாலைகள் மாற்றும் வைபவமும் நடந்தது.
கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது. காலை 8.54 மணியளவில் சுந்தரேசுவரர் மங்கல நாண் அணிவிக்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பின்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது பெண்கள் புது திருமாங்கல்ய கயிறு அணிந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மீனாட்சி அம்மனையும் சுந்தரேசு வரரையும் தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமியும், அம்மனும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, எம்எல்ஏக்கள் செல்லூர்கே.ராஜூ, ராஜன் செல்லப்பா,அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று இரவில் யானை வாகனத்தில் தங்க அம்பாரியில் பிரியாவிடை சுந்தரேசுவரர், ஆனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் நான்கு மாசி வீதிகளில் வலம்வந்து அருள்பாலித்தார். மீனாட்சியை திருக்கல்யாண கோலத்தில் திரளான பக்தர்கள் தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்.29) காலை 6.30 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 12-ம் நாள் (ஏப்.30) தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.