Select Location
All Locations
State
Region
City / District
நுழைவு கட்டண விவகாரம் | கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து வாகன ஓட்டுநர்கள் போராட்டம்

நுழைவு கட்டண விவகாரம் | கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து வாகன ஓட்டுநர்கள் போராட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் வனத்துறையை கண்டித்து, இன்று (மே 1) காலை முதல் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் ஒரே இடத்தில் ‘க்யூ ஆர் கோடு’ மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் விடுமுறை நாட்களில் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கின்றனர்.

எனவே, பழைய முறைப்படி அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் அந்தந்த இடத்திலேயே தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்ரல் 19-ம் தேதி கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் வாகனங்களை இயக்காமல் பேருந்து நிலையத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதில், 5 நாட்களுக்குள் வனத்துறை சுற்றுலா இடங்களில் தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தற்போது கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

அதனால் கொடைக்கானல் நகர் மற்றும் அனைத்து சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே, அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை தொடர்வதால் அப்பகுதியை சுற்றுலா வாகனங்கள் கடந்து செல்ல குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரமாகிறது. அதனால் மலைச்சாலையில் வாகனங்கள் பல கி.மீ., தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அன்றாட பணிகளுக்கு செல்லும் உள்ளூர் மக்களும் பெரிதும் பாதிக்கின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை முதல் வனத்துறை நுழைவு கட்டணம் வசூலித்து வரும் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலையின் குறுக்கே சுற்றுலா வானங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் வாகனங்களிலேயே காத்திருக்கின்றனர். ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், வனத்துறையா? வசூல் துறையா? என சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.


Hindu Tamil 4 hours ago
Home Flash News