ஹிமந்த பிஸ்வா சர்மா ராஜினாமா: அசாமில் மே 12-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழா
குவாஹாட்டி:
அசாம் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக இக்கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இதனிடையே, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் அசாம் மாநிலத்துக்கான மத்தியப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓரிரு நாளில் பாஜகவின் மத்தியப் பார்வையாளர்கள் குவாஹாட்டிக்கு வருவார்கள் என்றும், அதன் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஹிமந்த பிஸ்வா சர்மாவே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு பதவியேற்பு விழா மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்தார். புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக பதவியில் தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.