Select Location
All Locations
State
Region
City / District
“எனக்கு பிடிக்கவில்லை” - ஈரானின் பதிலை நிராகரித்த ட்ரம்ப்

“எனக்கு பிடிக்கவில்லை” - ஈரானின் பதிலை நிராகரித்த ட்ரம்ப்

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் அளித்த பதிலை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் பிரதிநிதிகள் அனுப்பிய பதிலை இப்போதுதான் வாசித்தேன். இது எனக்குப் பிடிக்கவில்லை; இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார். எனினும் நிராகரிப்புக்கான காரணம் குறித்து அவர் தெளிவாக எதையும் விளக்கவில்லை.

முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் காலதாமதம் செய்யும் தந்திரத்தைக் கையாண்டு அமெரிக்காவைப் பார்த்துச் சிரித்து வருவதாகவும், இனி அவர்கள் அப்படிச் சிரிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னாள் அதிபர் ஒபாமா ஈரானுக்குப் புதிய வாழ்வாதாரத்தை வழங்கியதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், தற்போது நிலைமை மாறிவிட்டதாகத் தெரிவித்தார். பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஈரானின் பதிலில் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு ஈரான் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்கி, கடற்படை முற்றுகையைத் தளர்த்த வேண்டும் ஆகிய நிபந்தனைகள் அதில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த ஒட்டுமொத்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கருதும் ட்ரம்ப், தனது 'வால் ஆஃப் ஸ்டீல்' என அழைக்கப்படும் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார அழுத்தத்தைத் தொடரப்போவதாக தெரிகிறது.


Hindu Tamil 56 minutes ago
Home Flash News