Select Location
All Locations
State
Region
City / District
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

- முனைவர் இளங்கோ கட்டிமுத்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் ஆராய்ச்சியாளருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தலைமையில், அணு சக்தி துறையின் தலைவராகப் பணியாற்றிய முனைவர் ஆர். சிதம்பரம் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இரண்டாவது முறையாக 'ஆபரேஷன் சக்தி' என்ற பெயரில், மூன்று அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தி இந்தியா முதல் வெற்றி கண்டது. மேலும் இரு சோதனைகள் மே 13-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டன. இதனால், உலகின் அணு ஆயுதப் பட்டியல் கொண்ட நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்தது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'திரிசூல்' ஏவுகணை, 'ஹன்சா-3' என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் மே 11-ஆம் தேதிதான் முதன்முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடைபெற்ற அந்த சோதனைகளை நினைவுபடுத்தவும், அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்கவும், மக்களிடையே அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகவும், மே 11-ஆம் தேதி 'தேசிய தொழில்நுட்ப தினம்' என அறிவிக்கப்பட்டு, 1999-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய தொழில்நுட்ப தினம், 'ஆத்மநிர்பர் பாரத்' (தற்சார்பு இந்தியா) எனும் உணர்வை நினைவூட்டும் ஒரு வலிமையான நாளாகத் திகழ்கிறது. நடத்தப்பட்ட ஐந்து அணு ஆயுதச் சோதனைகளில் முதல் சோதனை ஓர் இணைவுக் குண்டு ஆகும். மீதமுள்ள நான்கு சோதனைகளும் பிளவுக் குண்டுகள் ஆகும். இந்தச் சோதனைகளின் விளைவாக, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு எதிராகப் பல தடைகள் விதிக்கப்பட்டன. மேலும், அதே ஆண்டு பாகிஸ்தான் மே 28, 30-ஆம் தேதிகளில் அணுகுண்டு சோதனைகளை நடத்த தூண்டுதலாக அமைந்தது.

அணு என்பதே சிறு நுண் துகள்! அதைப் பிளக்க முடியும் என்று பொதுவாகத்தான் மேடம் க்யூரி தம்பதிகள் 19-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்துக் கூறி நோபல் பரிசு பெற்றார்கள். ஆனால், அணு சக்தியைக் கட்டுப்படுத்தி, மனிதருக்கு ஆக்க சக்தியாகவும் மாற்ற முடியும் என்று கண்டறிந்தவர்கள் நம் முன்னோர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடனான இந்தியாவின் பிணைப்பு ஒன்றும் புதிதல்ல. 'பசி, மற்றும் வறுமை சார்ந்த பிரச்னைகளை அறிவியலால் மட்டுமே தீர்க்க முடியும்' என்று ஆணித்தரமாக முழங்கிய பண்டித ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர இந்தியா தேசத்தைக் கட்டமைப்பதில் அறிவியல் ஆராய்ச்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தது. அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் உள்நாட்டுத் தொழில்கள் ஆகியவற்றின் மீது பல தசாப்தங்களாகச் செலுத்தப்பட்ட கவனம், இந்தியாவின் தன்னிறைவுக்கான அடித்தளத்தை அமைத்தது. ஆசியாவிலேயே அணுசக்தித் திட்டத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.


Dinamani 1 hour ago
Home Flash News