Select Location
All Locations
State
Region
City / District
புதுச்சேரியில் 5-வது முறையாக முதல்வரானார் ரங்கசாமி: 2 அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரியில் 5-வது முறையாக முதல்வரானார் ரங்கசாமி: 2 அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி 5-வது முறையாக இன்று பதவியேற்றார். புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதையொட்டி புதுச்சேரி மாநில முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா துணைநிலை ஆளுநர் மாளிகை வளாகத்தில் இன்று காலை 9.47 மணிக்கு நடந்தது. இதில் புதுவை மாநில முதல்வராக 5-வது முறையாக ரங்கசாமி பதவியேற்றார். அவருடன், அமைச்சர்களாக பாஜக நமச்சிவாயம் , என்ஆர் காங்கிரஸ் மல்லாடி கிருஷ்ணா ராவ் பதவியேற்றனர்

முதல்வர், அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், சந்தோஷ்ஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டு 3வதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. மல்லாடி தெலுங்கில் பதவி ஏற்றார். புதுச்சேரி முதல்வராக 5-வது முறையாக பதவியேற்ற பின்பு முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு நடந்து வந்தார். அங்கே, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தனது அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், “புதுச்சேரி முதல்வராக 5-வது முறையாக பதவியேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய திட்டங்களுக்கு இன்று கையெழுத்திட்டுள்ளோம். மஞ்சள் ரேஷன் அட்டைத்தாரர்கள் காப்பீடுத் திட்டத்தில் பயன்பெற வழி செய்துள்ளோம். சிவப்பு ரேஷன்அட்டைதாரர்களுக்கு மட்டும் காப்பீடு இருந்தது. 

தற்போது புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்காத சிகிச்சைகளில் வெளி மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற ரூ. 3 லட்சம் அளவுக்கு மருத்துவ செலவுகள் திரும்ப அளிக்கப்படும் கோப்புக்கு கையெழுத்திட்டேன். இந்நிதியை மாநில அரசு தரும். சேதராப்பட்டில் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் தொழிற்பேட்டை கொண்டு வரும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் ‘நமோ புதுச்சேரி’ புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கான உள்கட்டமைப்பு, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை வசதிகள், தொழில்நுட்பக் கருவிகள், ஆராய்ச்சிக்கான சூழ்நிலை நிறுவுதல், சிறப்பு மருத்துவர்களைத் தெரிவு செய்து பயிற்சி அளித்தல் மூலம் முழுமையான, தரமான புற்றுநோய் சிகிச்சையை புதுச்சேரி மக்கள் பெறமுடியும் கோப்புக்கு கையெழுத்திட்டேன். விளையாட்டு மேம்பாட்டுத்காக ஸ்டேடியம் கட்டும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ஒரு வாரத்துக்குள் அமைச்சரை பதவியேற்பு நடக்கும். அமைச்சர்களுக்கு இலாக்காகள் ஒதுக்கும் போது சொல்கிறேன். இப்பணிகள் நிறைவடைந்த பிறகு டெல்லி சென்று பிரதமர் மோடியை கண்டிப்பாக சந்திப்பேன்” என்றார்.


Hindu Tamil 51 minutes ago
Home Flash News