Select Location
All Locations
State
Region
City / District
எளிதில் தப்பியது தவெக அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு அதிமுக அதிருப்தி அணியும் ஆதரவு

எளிதில் தப்பியது தவெக அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு அதிமுக அதிருப்தி அணியும் ஆதரவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5-ன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை 6 பகுதிகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிட்டு சபாநாயகர் அழைத்தார். இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தீர்மானத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரவு தெரிவித்தது. வேலுமணி தரப்பில் ஹரி, எஸ்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, இரா.காமராஜ், சத்தியபாமா, லீமா ரோஸ், மரகதம் குமரவேல்,சுகுமார், சேகர், திலீபன் ஜெய்சங்கர், நட்ராஜ், நத்தம் விஸ்வநாதன், க.மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஜெயக்குமார், அருள்மொழித் தேவன், சி.வி.சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், இ.சி.கோவிந்தராஜன், சு.பழனிசாமி, ராமச்சந்திரன், உஷாராணி, ஜெயசுதா, சம்பத் குமார், தளவாய் சுந்தரம், நல்லதம்பி, ராஜசேகர், ராஜேந்திரன், கோ.வெங்கடாசலம், வெற்றிவேல், வேலழகன், ஜெயசங்கரன் உள்ளிட்டோர் தீர்மானத்தை எதிர்த்தனர். பாமக, பாஜக இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது. இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Hindu Tamil 45 minutes ago
Home Flash News