உதயநிதியின் சனாதன பேச்சை கண்டித்து 17-ம் தேதி 4 நகரங்களில் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு
கோவை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் சனாதன பேச்சை கண்டித்து, 17-ம் தேதி சென்னை, கோவை உள்பட 4 நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தனது உரையை முடிக்கும் முன்பு சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியுள்ளார். உதயநிதியின் இந்த பேச்சு சட்டப்பேரவையின் மாண்பையும், மரபையும் அவமதிப்பதாகும். ஏற்கெனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று, சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசு போல் ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு, அவர் நீதிமன்ற பிணையில்தான் இருக்கிறார். முதல்வர் விஜய் தனது பதவியேற்பு விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என இந்த அரசு பாகுபாடு காட்டாது என பேசியிருந்தார். அனைத்து வகை மக்களின் பிரதிநிதியாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு பதிலாக இந்து மத, சனாதன வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது சபை மரபை மீறுவதாகும். உதயநிதி ஸ்டாலினின் இந்து விரோத பேச்சை கண்டித்து மே 17-ம் தேதி கோவை, திருப்பூர், சென்னை மற்றும் மதுரை ஆகிய 4 நகரங்களில் இந்து முன்னணி சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டப்பேரவையில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிடும்போது, இந்து கோயில்கள் பற்றிய வருமானம், சீரமைப்பு உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். உருக்கப்பட்ட கோயில் நகை விவரங்களும் இடம்பெற வேண்டும். தமிழக அரசு மதுக்கடைகளை குறைத்திருப்பதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.