Select Location
All Locations
State
Region
City / District
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 4 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட ஆரோக்கிய ‘புட் ஸ்ட்ரீட்’ அமைக்கும் பணி: ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் கால தாமதம்

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 4 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட ஆரோக்கிய ‘புட் ஸ்ட்ரீட்’ அமைக்கும் பணி: ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் கால தாமதம்

மாமல்லபுரம்: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த 4 ஆண்டுகளாக மாமல்லபுரம் கடற்கரையில் கிடப்பில் போடப்பட்ட சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியமான ‘புட் ஸ்ட்ரீட்’ அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். மாமல்லபுரம் கடற்கரையில் ஐஸ்கிரீம் கடை, வறுத்த மீன்கள் விற்கும் கடை, அழகு பொருட்கள் விற்பனை கடை, கீ செயின் விற்கும் கடைகள், சங்கு மணிகள் விற்கும் கடை, மாங்காய் விற்கும் கடை, பஜ்ஜி - போண்டா விற்கும் கடைகள் என 100க்கும் மேற்பட்ட தற்காலிக தள்ளு வண்டி கடைகள், சாலையோர கடைகள் இயங்கி வருகின்றன. 

கடற்கரைக்கு பொழுதை கழிக்க வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள தள்ளுவண்டி கடைகளில் இருந்து பல்வேறு திண்பண்டங்களை ஆர்வமாக வாங்கி சாப்பிடுகின்றனர். அதில், சில பயணிகள் வறுத்த மீன்களை ருசி பார்க்கவே கடற்கரைக்கு பொழுதை கழிக்க வருகின்றனர். மேலும், கடற்கரையில் உள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர கடைகள் வரிசையாக இல்லாமல் ஆங்காங்கே அலங்கோலமாக காணப்பட்டன. இந்த நிலையில், மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள தள்ளு வண்டி கடைகள் மற்றும் சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்தி சுத்தம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான உணவு தெருவை உருவாக்கும் திட்டம் கொண்டு வர ஒன்றிய சுகாதாரத்துறை முடிவு செய்தது.

அதன்படி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குளியலறை வசதி, உயர் கோபுர மின்விளக்கு வசதி, குப்பை தொட்டிகள், கருங்கல் இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அழுகுபடுத்தவும், இங்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான தின்பண்டங்களும், தினமும் கடலில் பிடித்து வரும் மீன், இறால் போன்றவற்றை சுகாதாரமாக தயாரித்து வழங்கவும் ஒன்றிய சுகாதாரத்துறை கடந்த 2022ம் ஆண்டு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை மாமல்லபுரத்திற்கு வரவழைக்க எந்த மாதிரியான பணிகளை மேற்கொள்ளலாம் என தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

 ஆனால், ஆய்வு பணிகளை மேற்கொண்டு, 4 ஆண்டுகளை கடந்தும் ரூ.1 கோடி மதிப்பில் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியமான உணவு தெருவை உருவாக்கும் திட்டம் அதிகாரிகளின் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றுலா பயணிகள், கடற்கரை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், உணவு தெருவை உருவாக்கும் திட்டத்தை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை, சுற்றுலாத் துறை, நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், இந்த திட்டம் எங்களது துறையில் கீழ் வரவில்லையென ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் கடற்கரை வியாபாரிகள் குழப்பமடைகின்றனர்.

 எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உடனடியாக இதில் தலையிட்டு ஆரோக்கியமான உணவு தெருவை உருவாக்கும் திட்ட பணி எந்த துறையின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது என தெளிவுபடுத்தி, பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, கடற்கரை வியாபாரிகள் கூறுகையில், மாமல்லபுரம் கடற்கரையில் ரூ.1 கோடி மதிப்பில் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியமான உணவு தெருவை அமைப்பதற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அதன், பிறகு அதிகாரிகள் யாரும் தலை கட்டாமல், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

மேலும், எந்த மாதிரியான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வரைபடம் வரையப்பட்டு தேசிய சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது. இதுபோன்று, சுற்றுலா பயணிகளுக்கு பயன்தரும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் இருப்பது அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுவதாக உள்ளது என்றனர்.

 தள்ளுவண்டி கடைகாரர்களுக்கு பயிற்சி இங்கு 60க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர கடைகளை தேர்வு செய்து, கடைகாரர்களுக்கு தரமான உணவுகளை கலப்படம் இல்லாமல் தயாரித்து, சுகாதாரமாக பயணிகளுக்கு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

 கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் மாமல்லபுரம் கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் வரிசையாக இல்லாமல் அலங்கோலமாக காணப்படு கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். 
எனவே, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இன்றி அனைத்து கடைகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும்.

 அடிப்படை வசதி வேண்டும் ரூ.1 கோடி நிதி மூலம் இங்கு சோலார் மின் கம்பங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பேவர் பிளாக் சாலை, சிசிடிவி கேமரா, கழிப்பறை, இருக்கைகள், மின் விளக்கு வசதி அமைக்க வேண்டும்.

 திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை கண்காணிக்க போலீஸ் கண்காணிப்பு கோபுரமும் அமைக்க வேண்டும்.


Dinakaran 52 minutes ago
Home Flash News