தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் பிஎம்டபிள்யூ, யமஹா உள்ளிட்ட மோட்டார் வாகன நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட முதல்வர், அவர்களது தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். தமிழக முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி, காவல், வருவாய், தொழில், வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், மோட்டார் வாகன நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடன் அவர் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், தமிழகம் மற்றும் உலக அளவில் உள்ள பிரபலமான நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் தற்போதைய தொழில் நிறுவனங்களின் பங்களிப்புகள், அவற்றை பலப்படுத்துவதற்கான செயல்பாடுகள், மின்வாகன உற்பத்தியின் நிலை, மாநில ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தொழில் வளர்ச்சியில் மோட்டார் நிறுவனங்களின் பங்களிப்பை வெகுவாக பாராட்டிய முதல்வர் விஜய், அவர்களது தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உறுதியளித்தார். தமிழகத்தில் புதிய முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள், தொழில் நிறுவனங்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்தும் தொழில் நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
குறிப்பாக, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தாமஸ் டோஸ், யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் ஜிம் ஆட்டா ஆகியோர் முதல்வர் விஜய்யை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர். தமிழகத்தில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவர்களை முதல்வர் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு வாயிலாக, ஆட்டோமொபைல் தொடர்பான பல்வேறு புதிய முதலீடுகள் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய்யை, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலத் தலைவர் பி.ரவிந்திரன், தமிழக தலைவர் சி.தேவராஜன், துணைத் தலைவர் ஜெ.முருகவேல், முன்னாள் தலைவர் எம்.பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர்.
அப்போது, தொழில் துறை வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு, கொள்கை ரீதியான பங்களிப்பு ஆகியவற்றில் தமிழக அரசுடன் சிஐஐ நீண்ட காலம் கொண்டுள்ள கூட்டாண்மை குறித்தும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள், மாநிலத்தின் நிலையான பொருளாதாரம், தொழில் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சிஐஐ நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட முதல்வர், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. வேளாண் துறை ஆய்வுக் கூட்டம்: மேட்டூர் உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர் இருப்பு, குறுவை நெல் சாகுபடி குறித்து வேளாண்மை, நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டமும் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார், வேளாண்மை துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி, நீர்வளத் துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது, சாகுபடியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், வேளாண் பட்ஜெட் உள்ளிட்டவை தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.