Select Location
All Locations
State
Region
City / District
இஸ்ரேல் - லெபனான் சண்டை நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு

இஸ்ரேல் - லெபனான் சண்டை நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு

வாஷிங்டன், இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டது. அதேவேளை, இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு இஸ்ரேல் மீது மார்ச் 1ம் தேதி முதல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, மார்ச் 2ம் தேதி முதல் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தியது. மார்ச் 2ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெற்ற தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 

அதேவேளை, ஹிஸ்புல்லா கிளர்ச்சிக்குழுவினரை கட்டுப்படுத்துவதாகவும், ஹிஸ்புல்லா கிளர்ச்சிக்குழுவிடம் உள்ள ஆயுதங்களை முழுவதும் கைப்பற்றி அந்த அமைப்பை முழுவதும் ஒழிப்பதாகவும் இஸ்ரேலுக்கு லெபனான் அரசு உத்தரவாதம் அளித்தது. அதன் அடிப்படையில் இஸ்ரேல் - லெபனான் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் - லெபனான் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற இஸ்ரேல் - லெபனான் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்க ஒப்பக்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dhina Thanthi 50 minutes ago
Home Flash News