Select Location
All Locations
State
Region
City / District
இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு; இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கு நிர்ணயம்

இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு; இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கு நிர்ணயம்

இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு; இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கு நிர்ணயம் 12:51 AM May 21, 2026 IST featured-imgfeatured-img share Share fb twitter whatsapp ரோம்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இடையேயான சந்திப்பில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2029ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோ டாலருக்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே நாடுகளைத் தொடர்ந்து இறுதிகட்டமாக இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார். தலைநகர் ரோமில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தார். அப்போது, இரு தலைவர்களும் ஒரே காரில், புகழ்பெற்ற கொலோசியத்திற்கு சென்றனர். அங்கு பிரதமர் மெலோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், ரோம் நகரை அவர் சுற்றிக் காட்டிய புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவை சந்தித்து, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சார தொடர்புகள் உள்ளிட்ட இந்தியா-இத்தாலி நட்புறவு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

பின்னர், பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் மெலோனி இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி, ‘‘இந்தியா-இத்தாலி உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக, வர்த்தகம், முதலீடு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்’’ என்றார். முன்னதாக, பிரதமர் மோடியும், பிரதமர் மெலோனியும் இத்தாலிய ஊடகங்களுக்கு கூட்டாக எழுதிய கட்டுரையில், ‘இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தோ-மத்திய தரைக்கடலுக்கான ஒரு யுக்திசார் கூட்டாண்மையை மேற்கொண்டுள்ளது. சர்வதேச அமைப்பு முறை ஒரு ஆழமான மாற்றத்திற்கு உள்ளாகி வரும் இந்த காலக்கட்டத்தில் இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கூட்டாண்மை, எங்கள் பொருளாதார ஆற்றல், சமூக படைப்பாற்றல் மற்றும் பல்லாயிரம் ஆண்டுகால நாகரிக ஞானம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு புதிய மற்றும் உயர்ந்த பரிணாமத்தையும் பெற்று வருகிறது.

 புதிய இலக்குகளை அடைவதற்கும், எங்கள் பரஸ்பர ஆற்றல்களை ஒன்றிணைப்பதற்கும், இரு தரப்பு உறவை ஆழப்படுத்தவும், பல்வகைப்படுத்தவும் நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், இரு திசைகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது. பாதுகாப்பு மற்றும் விண்வெளி, தூய்மையான தொழில்நுட்பங்கள், எந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், மருந்துகள், ஜவுளி, வேளாண் உணவு, சுற்றுலா முதலிய துறைகளில் கவனம் செலுத்தி, 2029-ம் ஆண்டுக்குள் இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் இடையேயான 20 பில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தக இலக்கை அடையும்’ என கூறி உள்ளனர். இத்துடன் பிரதமர் மோடி தனது 5 நாடுகள் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார். * கொலோசியம் என்பது ரோம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பழங்கால நீள்வட்ட வடிவ திறந்தவெளி அரங்கம். 

உலகில் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகப்பெரிய பழங்கால திறந்தவெளி அரங்கம். * இந்தியா-இத்தாலி இடையே கடந்த ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 14.25 பில்லியன் யூரோக்களை (ரூ.1.59 லட்சம் கோடி) எட்டியுள்ளது. * 2025ல் இந்தியாவின் ஏற்றுமதி 8.55 பில்லியன் யூரோக்களாகவும் (ரூ.95,750 கோடி), இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கான ஏற்றுமதி 5.70 பில்லியன் யூரோக்களாகவும் (ரூ.63,850 கோடி) பதிவாகியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டை விட 9.42 சதவீதம் அதிகரிப்பாகும். * வரும் 2029ம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 20 பில்லியன் யூரோக்கள் (ரூ.2.25 லட்சம் கோடி) அளவிலான இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் 4வது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இத்தாலி திகழ்கிறது.


Dinakaran 43 minutes ago
Home Flash News