நீட் யூஜி 2026: தேர்வு கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான ஆன்லைன் போர்ட்டல் துவக்கம் – மே 27 கடைசி நாள்
மாணவர்கள் தங்களின் வங்கி விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, அதில் எவ்வித மாற்றங்களையும் அல்லது திருத்தங்களையும் செய்ய என்.டி.ஏ. அனுமதிக்காது. எனவே, விவரங்களைப் பதிவிடும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை, நீட் யூஜி (NEET UG 2026) தேர்வுக்கான கட்டணத்தை தகுதியுள்ள மாணவர்கள் திரும்பப் பெறுவதற்கான (Fee Refund) ஆன்லைன் போர்ட்டலை மே 22 அன்று திறந்துள்ளளது.
மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் புகார்கள் எழுந்ததால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தச் சூழலில், தேர்வு கட்டண ரீஃபண்டிற்கு தகுதியான மாணவர்கள் தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள் மற்றும் காலக்கெடு: போர்ட்டல் திறக்கப்பட்ட நாள்: மே 22, 2026 விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 27, 2026 (இரவு 11:50 மணி வரை) மாணவர்கள் தங்களின் வங்கி விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, அதில் எவ்வித மாற்றங்களையும் அல்லது திருத்தங்களையும் செய்ய என்.டி.ஏ. அனுமதிக்காது. எனவே, விவரங்களைப் பதிவிடும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறுகள் இல்லாத பணப் பரிவர்த்தனைக்காக, மாணவர்கள் ஆன்லைன் போர்ட்டலில் பின்வரும் வங்கி விவரங்களைக் கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்:
கணக்கு வைத்துள்ளவரின் பெயர் (Account Holder’s Name)
வங்கி கணக்கு எண் (Core Banking Account Number)
வங்கியின் பெயர் (Bank Name)
ஐஎஃப்எஸ்சி குறியீடு (IFSC Code)
வங்கி விவரங்களின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்தவும், பரிவர்த்தனை தோல்விகளைத் தவிர்க்கவும், ரத்து செய்யப்பட்ட காசோலையின் (Cancelled Cheque) ஸ்கேன் செய்யப்பட்ட நகலை மாணவர்கள் விருப்பப்பட்டால் (Optional) அப்லோடு செய்யலாம்.
மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ தங்களின் வங்கிகள் மூலமாக நேரடியாக 'சார்ஜ்பேக்' (Chargeback) கோரிக்கைகளைத் தொடங்க வேண்டாம் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
ரீஃபண்ட் போர்ட்டலைப் பயன்படுத்துவதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டால், மாணவர்கள் என்.டி.ஏ-வின் அதிகாரப்பூர்வ உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
உதவி எண்: +91-11-40759000
மின்னஞ்சல்: neetug2026@nta.ac.in