“தவெகவில் இணைய 90% அதிமுக நிர்வாகிகள் விருப்பம்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
சென்னை: “திமுகவுடன் இணைவதாக பழனிசாமி எடுத்த முடிவின் காரணமாகவே அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்து ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளனர்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
சென்னை பனையூரில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “யார் மக்கள் முன்பு உறுதியாக நிற்கிறார்களோ, மக்கள் அவர்களை தலைவராக உருவாக்குவார்கள். இப்படித்தான் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கப்பட்டார்கள். அப்படித்தான் ஜோசப் விஜய்யும் உருவாக்கப்பட்டுள்ளார். எனக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் அமைச்சராக இருந்தவர். இப்போது முதல்வர் விஜய் தலைமையிலும் அமைச்சராக உள்ளார். இந்த அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்.
மதச்சார்பின்மை, சமூக நீதியை காக்கும் வகையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கூட்டணியை முதல்வர் உருவாக்கியுள்ளார். திமுக ஆட்சியில் முதல்வர் குடும்ப நிதி, அமைச்சர் நிதி, கட்சி நிதி, அதிகாரிகள் நிதி என ஊழல் இருக்கும். இன்று எந்த ஊழலும் இல்லை. இன்று முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் வரை ஊழல் இல்லை.
இன்று சிஎம்டிஏவில் வீடு கட்ட ஒப்புதல் வாங்க பணம் கொடுக்க தேவையில்லை. பத்திரப் பதிவு, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை என எந்த துறையிலும் ஊழல் இல்லை. தமிழகத்தில் ஊழலை ஒழித்த வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கியுள்ளார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், மீண்டும் பழையபடி அந்த குடும்பத்தின் ஊழல் கீழ்மட்டம் வரை தொடர்ந்திருக்கும்.
பிரச்சாரத்தில் சொன்னபடி முதல்வர் நேர்மையாக இருக்கிறார். முதல்வர் எவ்வழியோ அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அவ்வழியே செயல்படுகின்றனர். எங்கள் கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் இடம்பெற்றன. அதனை திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணி குறித்து முடிவெடுக்க உரிமை உண்டு. இதுபோன்ற பண்ணையார்தனம், ஆதிக்கம் தான் திமுகவின் தோல்விக்கு காரணம். பிறப்பால் முதல்வராக உருவானதால் தான் இத்தகைய எண்ணம் ஸ்டாலினுக்கு வருகிறது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்களை ஏன் வரவேற்கிறோம் என்றால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பழனிசாமி எடுத்த முடிவுகள் தொண்டர்களுக்கு எதிராக இருந்தது. அதனால்தான் அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்தது.