கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் பலி!
கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையமான ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 13 பேர் பலியாகினர். 66 பேர் காயமடைந்தனர்.
ஈரான் போரின்போது கடந்த மார்ச்சில் இந்த எரிவாயு ஆலை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி, சேதமடைந்தது. இதையடுத்து, இந்த ஆலையின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பி வரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தணிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, எரிவாயு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டன. அப்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தால் ஆலை முழுவதும் தீப்பற்றியது. இதில் உயிரிழந்த 13 பேரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளா்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 66 பேரில் இந்தியா, கத்தார், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், கென்யா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர்
இந்த நிலையில், கத்தார் இயற்கை எரிவாயு ஆலை விபத்தில் பலியான 13 பேரில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும் அதில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பவித், பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகியோர் உயிரிழந்ததாகத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களின் இறப்புக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.