திரையரங்குகளில் பாப் கார்ன் விலைகளைக் குறைக்க வேண்டும்: ராம் சரண்
நடிகர் ராம் சரண் பாப் கார்ன் விலைகளைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படம் விளையாட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் நாயகனின் கதையாக உருவாகியிருந்தது. கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதுவரை இப்படம் ரூ. 400 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால், தமிழகத்தில் இப்படத்திற்கு எந்த வரவேற்பும் இல்லையென்றும் வசூல் ரீதியாக மிகச் சுமாரான தொகையையே வசூலித்துள்ளதாகத் தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார். இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய நடிகர் ராம் சரண், “இந்தியாவில் சினிமா இன்னும் மிக மலிவான பொழுதுபோக்காகவே இருக்கிறது. குடும்பத்தினருடன் சென்று படம் பார்ப்பது கூட்டுச் செயலாக நடைபெற்று வருவதால் திரையரங்குகளில் பாப் கார்ன் விலைகளைக் குறைத்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். டிக்கெட் விலையைவிட பல திரையரங்குகளில் பாப் கார்ன் விலை அதிகமாகவே இருக்கிறது. மல்டிபிளக்ஸுகளில் ரூ. 250க்கு மேலாக ஒரு பாப் கார்ன் விற்கபடுவதால் குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்பவர்கள் ரூ. 2 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளாகின்றனர். இதனால், நடிகர் ராம் சரணின் இக்கருத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.