Select Location
All Locations
State
Region
City / District
“காவிரி டெல்டாவை பார்வையிட வருகிறார் மத்திய நீர்வள ஆணைய தலைவர்” - பி.ஆர்.பாண்டியன்

“காவிரி டெல்டாவை பார்வையிட வருகிறார் மத்திய நீர்வள ஆணைய தலைவர்” - பி.ஆர்.பாண்டியன்

புதுடெல்லி: காவிரி டெல்டாவைப் பார்வையிட மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத் நேரில் வர உள்ளதாக, அவரை டெல்லியில் சந்தித்த தமிழக காவிரி விவசாய சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லி வந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத், உறுப்பினர் செயலரும், மேகதாட்டு திட்டத்தின் பொறுப்பு அதிகாரியுமான யோகேஷ் பாட்டன்கர் ஆகியோரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு, டெல்லியின் சேவா பவனில் சுமார் 45 நிமிடம் நடைபெற்றது. இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: கர்நாடக முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை, மேகேதாட்டு அணைக்கு அனுமதி கோரி மத்திய நீர்வள ஆணையத்தில் கடந்த 2021ம் ஆண்டு வரைவு திட்ட அறிக்கையை வழங்கினார். இதில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுப்பி வைத்தது. பின்னர், இந்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையமும் விவாதிக்க மறுத்து திருப்பி அனுப்பியது.

தற்போது முதல்வராக உள்ள டி.கே.சிவகுமார், மேகதாட்டு அணையை கட்ட அனுமதி கோரி வருகிறார். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கையை பின்பற்றி மத்திய நீர்வள ஆணையமும் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் வலியுறுத்தினேன். மேகேதாட்டு அணை கட்டுமானத்தை கர்நாடக விவசாயிகள் எதிர்த்து வருகிறார்கள். ஏனெனில், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே ஆயிரம் மீட்டர் ஆழத்தில் மேகதாட்டு அணை கட்ட திட்டமிடப்படுகிறது. இதனால், பற்றாக்குறை காலத்தில் கிருஷ்ணராஜ சாகரில் தண்ணீர் தேக்குவதை கைவிட்டு, குடிநீர் விநியோகத்தைக் கருத்தில் கொண்டு மேகேதாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிலை உருவாகும். எனவே, மேகதாட்டு அணை கர்நாடகாவுக்குத் தேவையில்லை என அம்மாநில விவசாயிகள் ஒருமனதாக தீர்மானித்துள்ளார்கள். மேலும், பெங்களூரில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் தருவதற்காக தமிழக விவசாயத்தை அழிக்கும் கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என்பதையும் வலியுறுத்தினோம்.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகளோ நீர்த்தேக்கங்களையோ கர்நாடகா கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக மேகதாட்டு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தினோம். மேலும், தமிழக காவிரி டெல்டாவில் நடப்பாண்டு (2026) குறுவைக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் மிகப்பெரிய இழப்பை டெல்டா விவசாயிகள் சந்தித்திருக்கிறோம். எதிர்காலத்தில் சம்பாவிற்கும் தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா ? என்கிற சந்தேகத்தில் உள்ளோம்.

ராசிமணலில் தமிழகம் அணைக்கட்டிக் கொண்டால், வலது கரை கர்நாடகாவுக்கு சொந்தமாகும் என்பதால் தேவையான குடிநீரை கர்நாடகா எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக 2024 இல் இரு மாநில விவசாயிகளும் மைசூரில் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுத்தோம் என்பதை எடுத்துரைத்தோம். காவிரி டெல்டாவில் கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு திட்டத்துக்கான அனுமதியை 6 ஆண்டு காலம் மத்திய அரசு வழங்காததால் கடல் நீர் உட்புகுவதை தடுக்க முடியவில்லை என்பதையும் எடுத்துரைத்தோம். இது குறித்து பதில் அளித்த அனுபவம் பிரசாத் மற்றும் யோகேஷ் பாட்டன்கர் இருவரும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். ராசிமணல் அணை குறித்து தமிழக அரசு இதுவரை கோரிக்கை வைக்கவில்லையே? என கேள்வி எழுப்பினர்.

மேலும், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் தமிழ்நாட்டில் உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர். விரைவில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவையும், அணைகளையும் நேரில் பார்வையிட வர உள்ளதாகவும், இது குறித்து எங்களுக்கு உரிய முறையில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். அதோடு, வெண்ணாறு கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அனுமதி தர தயாராக உள்ளதாகவும், இத்திட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தனர். முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் மற்றும் ஆணைய உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்து விரிவாக எடுத்துரைத்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


24 News 1 hour ago
Home Flash News