கிரீஸில் செயல்பாட்டுக்கு வந்தது யுபிஐ: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ஏதென்ஸ் (கிரீஸ்): இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வழிவகுத்த யுபிஐ, இப்போது ஐரோப்பிய நாடான கிரீஸிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஏதென்ஸில் உள்ள யூரோ வங்கி தலைமையகத்தில் அதன் தலைமைச் செயல் அதிகாரி ஃபோகியோன் கராவியாஸ், ஃபேர்ஃபாக்ஸ் டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் துக்னைட் ஆகியோருடன் இணைந்து யூரோ வங்கி - என்ஐபிஎல் மூலம் யுபிஐ சேவைகளை சாத்தியமாக்கும் நேரடி செயல் விளக்கத்தைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. இது இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சூழலின் உலகளாவிய விரிவாக்கத்தில் மற்றொரு மைல்கல். கிரீஸில் இப்போது யுபிஐ செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் இனி, உடனடியாக, பாதுகாப்பாக, தடையின்றி பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். பரிவர்த்தனைச் செலவுகள் வழக்கமான செலவுகளில் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இருக்கும்.
யுபிஐக்கு அதிகரித்து வரும் உலகளாவிய ஏற்பும் பாராட்டும், எல்லைகளைக் கடந்து மதிப்பை உருவாக்கும், தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளைக் கட்டமைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார். கரீஸில் யூரோ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஃபோகியோன் கராவியாஸ் உடன் கலந்துரையாடிய பியூஷ் கோயல், இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார். மேலும், கிரீஸ் வணிக நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவித்தார். அதோடு, கிரிஸில் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இருவரும் ஆராய்ந்தனர்.