தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏவிடம் பேரம் : ரூ.35 கோடியை தயார் செய்த செந்தில் பாலாஜி நண்பர்கள்..!
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் நாங்கள் சொல்வது போல் கேட்டு சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.35 கோடி வரை பணம் கிடைக்கும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் சிலர் பேசி உள்ளனர். இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் என்.இளையராஜாவை, சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் கருத்துக் கணிப்பு நிறுவனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேறு பணியில் இருப்பதாக கூறி எம்எல்ஏ இளையராஜா அந்த அழைப்பை துண்டித்துள்ளார். அதன் பின்னரும் மீண்டும் தொடர்பு கொண்டதாக கூறப்படும் திருநாவுக்கரசு, தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
அதற்கு பிரதிபலனாக ரூ.35 கோடி வரை வழங்க தயாராக இருப்பதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்த போது, ‘‘இந்த விவகாரம் குறித்து வெளியில் கூறினால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும்’’ என்று மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். அதில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான என்னை சட்ட விரோதமாகச் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததுடன், லஞ்சம் வழங்க முன்வந்தும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். செல்போன் அழைப்பு விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்தனர். தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி உள்ளது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளைராஜா அளித்த புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சதியில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான நரேசை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னையில் வைத்து நேரடியாக சந்தித்து பேசியதாகவும், செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் கூறிய அறிவுரையின் பேரிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் பேசியதாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45) வீட்டில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டு அவரையும் கைது செய்தனர். தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய புகாரில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரமேஷ், சீனிவாசன், செல்வம் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீசார் கரூரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அசோக் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.