முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது..!!!
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆத்தூரில் இன்று காலை கைது செய்யப்பட்டார். முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தனது பேச்சுக்கு அவதூறு வழக்குதான் தொடர வேண்டுமே தவிர, காவல்துறை வழக்கு பதிவு செய்ய முடியாது என்று அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த காவல்துறை, ஏழு முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த மனுதாரர் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் பேசியிருக்க வேண்டும் என்று வாதிட்டது. இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "1967-ஆம் ஆண்டிற்குப் பின் தமிழகத்தைத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள்; எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் ஏன் இதுபோலப் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.