Select Location
All Locations
State
Region
City / District
“ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வெகுமதி படம் வெளியாகும் நாளல்ல...” - சசிகுமார் நன்றி!

“ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வெகுமதி படம் வெளியாகும் நாளல்ல...” - சசிகுமார் நன்றி!

முதல் படமே முத்திரை பதித்த பட்டியலில் சசிகுமாரை இணைத்த படம்‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரித்து இயக்கியும் அதில் நடித்தும் ஒட்டுமொத்த சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார். காதல், காமெடி, நட்பு, துரோகம், அரசியல் என பல்வேறு விஷயங்களை ஒரு சேர்த்து 80-களின் காலகட்டத்தை கண்முன் கொண்டு வந்து கமர்ஷியலாகவும் விமர்சனமாகவும் ஒரு தடம் பதித்தது. கேமரா, கலை இயக்கம், இசை, எடிட்டிங் என அத்தனை துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக கொடுத்த இந்தப் படம் தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் லிஸ்டில் இருந்து வருகிறது. இதனால் கடந்த 2023ஆம் ஆண்டு இப்படம் ரீ ரிலீஸாகி மீண்டும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் சசிகுமாரைத் தவிர்த்து ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வேதா, கஞ்சா கருப்பு என ஏராளமானோர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி ஹிட். சசிகுமாருக்கு சிறந்த முகவரியாக அமைந்த இப்படம் இன்றுடன் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி ரசிகர்கள் பலரும் இப்படத்தை பற்றிய தனது அனுபவங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சசிகுமார் தனது நன்றியை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வெகுமதி படம் வெளியாகும் நாளல்ல, மாறாக, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படம் நினைவுகூரப்படுவதே.

சுப்ரமணியபுரம் படத்தை மறக்க முடியாத 18 ஆண்டுகளாகத் தாங்கிப் பிடித்தமைக்கு நன்றி. இந்தப் பயணத்தை அழியாத ஒன்றாக மாற்றிய ஒவ்வொரு கலைஞர், தொழில்நுட்பக் கலைஞர், ஊடகத்தினர் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Nakkeeran 1 hour ago
Home Flash News