Select Location
All Locations
State
Region
City / District
லாலு பிரசாத், ராப்ரி தேவிக்கு மீண்டும் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியது பிஹார் அரசு

லாலு பிரசாத், ராப்ரி தேவிக்கு மீண்டும் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியது பிஹார் அரசு

பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோருக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பை அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக வழங்கியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இஸட் பிளஸ் பாதுகாப்பு கடந்த மாதம் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த காவல் துறையினர், எண்.10, சர்குலர் சாலை, பாட்னா என்ற முகவரியில் உள்ள அவர்களின் அரசு பங்களாவில் இருந்து வெளியேறினர். அத்துடன், அந்த பங்களா அமைச்சர் நந்த கிஷோர் ராமுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஹார்டிங் சாலையில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள மாற்று இல்லத்துக்குச் செல்லுமாறும் ராப்ரி தேவிக்கு மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும், ராப்ரி தேவி தான் வசித்து வரும் பங்களாவை இன்னும் காலி செய்யவில்லை.

இந்நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்தும் மாநில பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகிய இருவருக்கும் இஸட் பிளஸ் பாதுகாப்பை பிஹார் அரசு மீண்டும் வழங்கியுள்ளது. இதன்மூலம், இரு தலைவர்களுக்கும் குண்டு துளைக்காத பிரத்யேக வாகனம் மற்றும் சிறப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும். ராப்ரி தேவி தனது அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி, “முதல்வரின் இல்லம் மக்களுக்குச் சொந்தமானது, அதை யாரும் தங்களது தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு உட்பட்ட சொத்தாகவோ பூர்வீக சொத்தாகவோ கருத முடியாது. எனது பதவிக் காலம் முடிந்த 24 மணி நேரத்துக்குள் நான் அரசு இல்லத்தை காலி செய்வேன்” எனத் தெரிவித்திருந்தார்.


Hindu Tamil 15 hours ago
Home Flash News