பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு புகார்: விசாரணைக்கு உத்தரவு, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு
புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலை தொடர்ந்து, பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் 4 முக்கியப் புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத்தில் உள்ள விஷ்ணு கோயில் உள்ளது. கடந்த 2025-ல் 51 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.இந்தக் கோயிலை பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி (பிகேடிசி) நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் பிகேடிசி தலைவரின் தனிப்பட்ட செயலாளர் மீது பைரவ் சேனா எனும் ஆன்மிக அமைப்பு தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை கோரி பிகேடிசியின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹன் ரங்கத்திடம் பைரவ் சேனாவின் நிறுவனத் தலைவர் சந்தீப் கத்ரி மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் பத்ரிநாத் கோயில் காணிக்கையில் முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல் நடந்துள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட ஊழியரின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து பிகேடிசி தலைவர் ஹேமந்த் திவேதி கூறுகையில், “சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படும் நபர் உண்மையில் எனது தனிப்பட்ட செயலாளர் அல்ல. அவர் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டியின் ஒரு சாதாரண அரசு ஊழியர். இதற்கு முன்பு அவர் மூன்று கோயில் கமிட்டித் தலைவர்களிடம் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை எனத் தெரிந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விசாரணைக்காக ஒரு குழுவை அமைக்கவும் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அப்புகாரின் அடிப்படையில், பத்ரிநாத் கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.
இந்த விவகாரத்தில் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் ஊழியர்கள் கூட்டமைப்பும் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் விஜேந்திர பிஷ்ட், கோயில் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.