71 வயதில் ஜாக்கி சான் எடுத்த உருக்கமான முடிவு
புரூஸ் லீ-க்கு பிறகு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஆசிய நடிகர்களில் முக்கியமானவராக ஜாக்கி சான் திகழ்கிறார். '1985', 'போலீஸ் ஸ்டோரி', 'டிரங்கன் மாஸ்டர்', 'ரஷ் ஹவர்', 'கராத்தே ஹிட்' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தனது படங்கள் மூலம் உலகளாவிய புகழைப் பெற்றுள்ளார்.
71 வயதான ஜாக்கி சான், தான் மறைந்த பிறகே வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், தனது இறுதி சடங்கில் ஒலிக்க வேண்டிய பிரத்யேக பாடல் ஒன்றை ரகசியமாக பதிவு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பாடல் தனது வாழ்க்கைப் பயணத்தையும், உலக மக்களுக்கு சொல்ல விரும்பும் இறுதி செய்தியையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது இறுதி அஞ்சலி நிகழ்வில் அந்த பாடல் கட்டாயம் ஒலிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரின் மறைவு ஜாக்கி சானை ஆழமாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அனுபவங்களே வாழ்க்கை மற்றும் மரணம் குறித்து முன்கூட்டியே சிந்திக்க அவரைத் தூண்டியதாகவும், அதன்பிறகே தனது இறுதி சடங்குக்கான பாடலை பதிவு செய்யும் முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.