முதல்வர் விஜய் ஜூலை 10-ல் கரூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு
கரூர்: ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு, கரூர் வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்கத்தில் ஏடிஜிபி அன்பு ஆய்வு செய்தார். மேலும், விஜய் வருகையின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மட்டும் தனியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தவெக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் குடும்பங்களை முதல்வர் விஜய் அப்போது சந்திக்க திட்டமிட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்து ஆறுதல் கூறினார். அதற்கு முன்னதாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இச்சம்பவம் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், தற்போதைய அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பின் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாறியது.
இது தொடர்பாக தற்போதைய முதல்வர் விஜய், அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, பாதுகாப்பு பணியில் ஈடுட்ட போலீஸார், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தர்கள் உள்ளிட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 108 இடங்களில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து முதல்வர் விஜய் கரூர் வர உள்ளதாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருருக்கு அரசு வேலை வழங்குவதற்கு ஏதுவாக குடும்பத்தினரின் கல்வித் தகுதி உள்ளிட்ட ஆவண விவரங்களை கேட்டுப் பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலைக்கான உத்தரவு வழங்குவது விசாரணை பாதிக்கும் என திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் காரணமாக திமுக அதனை திரும்பப் பெற்றது.
ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் வருவது உறுதியானதை அடுத்து கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் (அட்லஸ்) கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு இன்று (ஜூலை 7) மதியம் 1 மணிக்கு ஏடிஜிபி அன்பு வெண்ணெய்மலை தனியார் (அட்லஸ்) கலையரங்கம் மற்றும் அதனையொட்டியுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜி சிபிசக்கரவர்த்தி, கரூர் எஸ்பி டி.என்.ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர். அன்று பிற்பகல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மட்டும் தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.