Select Location
All Locations
State
Region
City / District
எல் நினோ தாக்கம்: இந்திய பொருளாதாரம் 3 வழிகளில் பாதிக்கும் அபாயம்!

எல் நினோ தாக்கம்: இந்திய பொருளாதாரம் 3 வழிகளில் பாதிக்கும் அபாயம்!

எல் நினோ, சூப்பர் எல் நினோ ஆகிய இரு வார்த்தைகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய வானிலை ஆய்வு மையமும், பல்வேறு தனியார் வானிலை தன்னார்வலர்களும் தொடர்ந்து எச்சரித்தனர். எல் நினோ என்ற வார்த்தையின் தாக்கம் இப்போதுதான் தேசத்தின் கடைக்கோடி மக்களை வாட்டத் தொடங்கியிருக்கிறது. இதன் உக்கிரம் போகப்போகத் தெரியும் என்று வானிலை தன்னார்வலர்கள் தெரிவிக்கிறார்கள். தேசத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம், வேளாண்மை, அன்றாட வாழ்க்கையில் இனி ‘எல் நினோ’வின் தாக்கம் நேரடியாக தலையிடத் தொடங்கும் அபாயம் காணப்படுகிறது.

பருவமழை பற்றாக்குறை இந்தியாவின் பெரும் பகுதி மாநிலங்களுக்கு மழையைக் கொடுக்கும் தென் மேற்கு பருவமழை ஜூனில் காலதாமத்துடனே கேரளாவில் தொடங்கியது. வட மாநிலங்கள், மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் பெரும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழல் நிலவியது. ஜூன் மாதம் முடிந்த நிலையில், 40% மழை பற்றாக்குறையாக இருக்கிறது என்றும், ஜூலை மாதத்தில் மழை ‘இயல்புக்கும் குறைவாக’ இருக்கும் அல்லது 94% அளவு அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்புக்கும் குறைவான மழை என்றபோதே, பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும். குறிப்பாக, வேளாண்மைக்கு நீர்பாசனப் பற்றாக்குறை, நீர் மின் உற்பத்தி, குடிநீர் பிரச்சினை என பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் புள்ளிவிவரங்கள்படி, ஜூன் மாதத்தில் நீண்டகால சராசரி மழை அளவான 165.33 மிமீ அளவில் இந்து 38.8% குறைந்து, 99.5 மி.மீ அளவுதான் இருக்கிறது எனத் தெரிய வருகிறது.

பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்? மோசமான பருவமழை இந்தியப் பொருளாதாரத்தை 3 வழிகளில் பாதிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அவை: முதலாவது, வேளாண் உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண் துறையின் பங்களிப்பு குறையும். இரண்டாவது, கிராமங்களில் உள்ள மக்களின் வருமானத்தை பெருமளவு பாதிக்கும். பருவமழை மோசமடையும்போது அல்லது பொய்க்கும்போது வேளாண்மை நடக்காது. வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் விவசாயிகள் வருமானம் இன்றி வாடுவார்கள். இது அவர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். மூன்றாவது, பருவமழை பற்றாக்குறை அல்லது மழை பொய்த்ததால் உணவுப் பொருட்கள் உற்பத்தி நிறைவாக இருக்காது. இதனால் தேவைக்கு ஏற்றார்போல் உணவுப் பொருட்கள் சப்ளை சந்தையில் இல்லாதபோது, இயல்பாகவே தேவை காரணியை தூண்டிவிட்டு, விலைவாசியை உயர்த்தும். இதனால் பணவீக்கம் உயர்வதற்கு முக்கியக் காரணியாக பருமழை பற்றாக்குறை தூண்டிவிடும். 2024-25 கரீப் பருவத்தில் இந்தியாவின் உணவுதானிய உற்பத்தி 357.73 மில்லியன் மெட்ரிக் டன்னாகும். இது முந்தைய ஆண்டின் உற்பத்தியைவிட 25.43 மில்லியன் மெட்ரிக் டன் அதிகமாகும். ஆனால், இந்த ஆண்டில் இதுபோன்ற கூடுதல் உற்பத்தியை எதிர்பார்ப்பது கடினம். ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் விடுத்த அறிக்கையில் ‘தெற்கு மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்’ என எச்சரித்துள்ளது.

மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.9% உயர்ந்தது. இது, ஏப்ரலில் 3.5% மட்டுமே இருந்தது. உணவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பணவீக்கம் அதிகரித்தது. வரும் காலங்களில் பருவமழை பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தில் ஸ்கூல் ஆப் டெவலப்மென்ட் பிரிவின் பேராசிரியர் ஆர் ராமகுமார், ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “எல் நினோ, பருமழை பற்றாக்குறை மக்களின் வாழ்வாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும். பருமழை பற்றாக்குறையும், மேற்காசிய போர் பதற்றம், அதைத் தொடர்ந்த பிரச்சினையும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார். அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு பேராசாரியர் பரத் ராமசாமி அளித்த பேட்டியில் “வேளாண் வருமானம் 10% வரை பருமழை பொய்ப்பால் குறையலாம். வேளாண்மை பாதிக்கும்போது, அதைத் தொடர்ந்து, சார்ந்திருக்கும் அனைத்து தொழில்களும் பாதிக்கும். கிராமங்களில் தேவை குறையும்போது அல்லது தேவை இல்லாத பட்சத்தில் தொழில் உற்பத்தியும் சரிந்து பாதிக்கும். கிராமப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு, மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்கும். இரு சக்கர வாகன விற்பனை, டிராக்டர் விற்பனை, சரக்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கும். சிறு நகரங்களில் ரியல் எஸ்டேட் விற்பனையும் மந்தமாகும்” என்றார்.

டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் ஸ்கூல் ஆப் டெவலப்மென்ட் பிரிவின் பேராசிரியர் ஆர் ராமகுமார் கூறுகையில் “வறட்சியைத் தாங்குமாறு இந்தியப் பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். இடர்பாடுகளைக் குறைக்கும் வகையில் பயிர்க் காப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆபத்தைக் குறைக்கக் கூடிய கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அதிக முதலீடு தேவை. ஆனால், அது போதுமானதாக இல்லை என்பதுதான் நிதர்சனம். பேரழிவுகளை தாங்க நம்முடைய தயாரிப்பு நிலை, முன்னெச்சரிக்கை நிலை மோசமாக இருக்கிறது. பயிர்க் காப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செலவிட வேண்டும். இதில் அதிகமாக செலவிடாதபோது, விவசாயிகளுக்கு எவ்வாறு பலன் சென்று சேரும்? பயிர்க் காப்பீட்டை மட்டுமே நாம் நம்பியிருக்க முடியாது. அரசு வறட்சி நிவாரணத்தையும் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News