Select Location
All Locations
State
Region
City / District
சோனம் வாங்சுக் - உடல்நிலை கவலைக்கிடம் - உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு

10வது நாள்.. 7.3 கிலோ எடை இழந்த சோனம் வாங்சுக் - உடல்நிலை கவலைக்கிடம் - உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது.

உண்ணாவிரதம் இதில் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் லடாக் மாநில உரிமை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதம் 10வது நாளை எட்டியுள்ளது. அவரது உண்ணாவிர போராட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை அவரது உடல் எடையில் 7.3 கிலோ குறைந்துள்ளது. குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை அளவு காரணமாக சோனம் வாங்சுக் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தினசரி மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் சிஜெபி அமைப்பினர் தெரிவித்தனர். நீண்டகால உண்ணாவிரதம் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியும் வாங்சுக் தனது போராட்டத்தை கைவிட மறுத்து, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனிடையே அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) வை மாணவர்களும் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களை படம் பிடித்த போலீஸ் போராட்ட களத்தில் பெண் தன்னார்வலர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த காவல்துறையினரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே சாடியுள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவு 11:00 மணியளவில், டிசிபியின் உத்தரவின் பேரில் பெண் தன்னார்வலர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இரகசியமாக எடுக்கப்பட்டதாக அபிஜீத் தீப்கே குற்றம் சாட்டினார். இதற்கிடையில் அபிஜீத் தீப்கே, அமைப்பின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்காக இன்றுடெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

20 மாணவர்கள் பலி முன்னதாக அப்ஜித் தீப்கே தனது எக்ஸ் பதிவில், "தேர்வு முறைகேடுகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பிறகும், தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்குவதற்குப் பிரதமர் மோடி இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்கப் போகிறார்? பிரதமருக்குத் தர்மேந்திர பிரதான் ஏன் இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார்?" என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடதக்கது.


Malaimalar 1 day ago
Home Flash News