டாடா குழுமத்தில் கவனம் ஈர்க்கும் புதிய முகம்... யார் இந்த மாயா டாடா?
1868-ல் ஜாம்ஷெட்ஜி நுசர்வஞ்சி டாடா தொடங்கிய டாடா குழுமம் இன்று 157 ஆண்டுகளைக் கடந்தும் இந்திய தொழில் துறையின் மிக நம்பகமான நிறுவனக் குழுமங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. எஃகு முதல் தகவல் தொழில்நுட்பம் வரை, கார்கள் முதல் விமான சேவைகள் வரை, உப்பு முதல் ஃபேஷன் வணிகம் என அதன் தடம் பரவியுள்ளது.
இந்த வளர்ச்சியில் ஒவ்வொரு தலைமுறையும் தங்களுக்கென புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. அந்த வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதவிருக்கும் புதிய தலைமுறை நிர்வாகிகளில், இன்று இந்திய தொழில்துறை உலகின் கவனத்தை அதிகமாக ஈர்த்திருக்கும் பெயர்தான் மாயா டாடா
டாடா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை டாடா குழுமத்தின் முக்கிய நிர்வாகியான நோயல் டாடா மற்றும் ஆலூ மிஸ்திரி தம்பதியின் இளைய மகள்தான் மாயா டாடா. நோயல் டாடா தற்போது டாடா இன்டர்நேஷனல், வொல்டாஸ், ட்ரெண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளார். ஆலூ மிஸ்திரி இந்திய தொழில் துறை வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த மிஸ்திரி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மூன்று தலைமுறைகளாக இந்திய தொழில் துறையில் தாக்கம் செலுத்திய குடும்பத்தின் வாரிசாக இருந்தாலும், குடும்பப் பெயரை மட்டுமே நம்பாமல், நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகள், தரவு சார்ந்த முடிவுகள் மற்றும் தொழில்முறை அனுபவத்தின் வழியே தனது தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கியிருப்பதே மாயா டாடாவின் தனிச் சிறப்பாகும்
157 ஆண்டுகள் பழமையான டாடா பாரம்பரியத்தை, டிஜிட்டல் யுகத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதிய வடிவத்தில் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இன்று மாயா டாடாவின் தோள்களில் இருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், அது வெஸ்ட்சைடின் வளர்ச்சியை மட்டுமல்ல, இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் அடுத்த தலைமுறை நிர்வாகப் பயணத்துக்கும் புதிய அடையாளமாக அமையும்.