“முதல்வர் விஜய் கரூர் செல்வதால் திமுகவுக்கு என்ன பயம்?” - அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை: “திமுகவும், அதிமுகவும் சேர்ந்து எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. முதல்வர் விஜய் கரூர் செல்வதால் அவர்களுக்கு என்ன பயம்?” என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூட்டணி கட்சிகளுக்கான அடுத்தக் கட்ட கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்பட்டு, கூட்டணிக்கான பெயர், குறைந்தபட்ச செயல்திட்டம் ஆகியவை குறித்து முடிவு செய்யப்படும்.
முதல்வர் விஜய் கரூருக்கு செல்வதால் அவர்களுக்கு என்ன பயம்? சிபிஐ தனது வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் என்ன மனு கொடுக்க முடியும்? முதல்வர் கரூர் செல்வதை எப்படியாவது தடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இப்போதே இவ்வளவு மனுக்கள் போடுகிறார்கள்.
அரசு மக்களுக்கான சேவைகளை சிறப்பாக செய்து வருகிறது. இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திமுகவும் அதிமுகவும் சேர்ந்து எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. இருவரும் இணைந்து ஆட்சி அமைக்க நினைத்தார்கள். ஒரு சில மாதங்களில் இந்தக் கட்சியில் ஆளே இல்லாமல் போய்விடும. தமிழக மக்கள் இவர்களை அந்த இடத்தில்தான் வைத்துள்ளனர்” என்று அவர் கூறினார்.