Select Location
All Locations
State
Region
City / District
“கமேனி படுகொலைக்கு பழி தீர்க்கப்படும்” - ஈரான் ராணுவத் தளபதி உறுதி

“கமேனி படுகொலைக்கு பழி தீர்க்கப்படும்” - ஈரான் ராணுவத் தளபதி உறுதி

தெஹ்ரான்: உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்துக்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அகமது வகிதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய வான் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் மூண்டது. தொடர் மோதல்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இடைக்கால உடன்படிக்கை ஏற்பட்டதையடுத்து, போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் பல்வேறு முக்கிய நகரங்கள் வழியாகச் சென்று அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் நேற்று (ஜூலை 9) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் கொல்லப்பட்டது குறித்துப் பேசிய ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (ஐஆர்ஜிசி) தளபதி பிரிகேடியர் ஜெனரல் அகமது வகிதி, “ஈரான் உச்சத் தலைவர் கோழைத்தனமான முறையில் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கப்படும். அதற்கேற்ப அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நீதி முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு குறிப்பாக குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்க ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும். உச்சத் தலைவரின் படுகொலை வரலாற்றின் நினைவில் இருந்து ஒருபோதும் அழியாது. அமெரிக்காவின் குற்றம் இழைக்கும் தலைவர்களும், ஈரான் ராணுவத்தின் அனைத்து எதிரிகளும் ஒன்றை அறிய வேண்டும். இந்த தெய்வீக தலைவரை கோழைத்தனமாகக் கொன்றதன் மூலம், எதிர்ப்பை ஒருபோதும் நீர்த்துப் போகச் செய்ய முடியாது. பழிவாங்குவதும், குற்றவாளிகளைத் தண்டிப்பதும், உறுதியான, நியாயமான, மறக்க முடியாத கோரிக்கையாகத் தொடரும்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, தேவைப்பட்டால் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்க தங்கள் நாடு தயாராக உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ராணுவ விழா ஒன்றில் பேசிய அவர், “வான்வழி மேலாதிக்கத்தை மீட்டெடுக்கவும், அச்சுறுத்தல்களை ஒழிக்கவும் தேவைப்பட்டால் ஈரான் மீது மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயாராக உள்ளது. நாங்கள் மீண்டும் போருக்குச் செல்வதாக இருந்தால் இன்னும் அதிக வலிமையுடன் செல்வோம்.” என தெரிவித்தார். இதே நிகழ்ச்சியில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் முன்னெப்போதையும்விட பலவீனமாக உள்ளது. அதேநேரத்தில் இஸ்ரேல், முன்னெப்போதையும்விட வலிமையாக உள்ளது. ஏமன் முதல் ஈரான் வரை எங்கு வேண்டுமானாலும் இஸ்ரேலிய விமானப்படையின் கரங்கள் செல்ல முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். (ஈரானுக்கு எதிரான) இந்த நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News