மத்திய, மாநில அரசு விழாக்களில் மாநிலப் பாடல், தேசியப் பாடல் (வந்தே மாதரம்) மற்றும் தேசிய கீதம் (ஜன கண மன) ஆகியவை பாடப்பட வேண்டிய வரிசை முறை மற்றும் நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தேசிய சின்னங்கள் மற்றும் பாடல்களுக்கான மரியாதையை உறுதி செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாடல்களின் வரிசை முறை:
மாநிலப் பாடல் பாடும் வழக்கம் உள்ள மாநிலங்களில், அரசு விழாக்களின் போது 'முதலாவதாக மாநிலப் பாடலே' பாடப்பட வேண்டும்.
பிரிக்கக் கூடாத தேசியப் பாடல்கள்:
மாநிலப் பாடலைத் தொடர்ந்து, தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' மற்றும் தேசிய கீதமான 'ஜன கண மன' ஆகிய இரண்டும் இடைவெளியின்றி அடுத்தடுத்து ஒன்றாகப் பாடப்பட வேண்டும். மாநிலப் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கும் நடுவில் பிற எந்தவொரு பாடலையும் பாட அனுமதி இல்லை.
அசல் வரிகள் மற்றும் உச்சரிப்பு:
தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதம் பாடப்படும் போது, அவற்றின் அசல் வரிகள், சரியான ராகம் மற்றும் துல்லியமான உச்சரிப்பு முறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். இதற்கான அங்கீகரிக்கப்பட்ட வரிகள் மற்றும் உச்சரிப்பு வழிகாட்டிகள் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த புதிய நெறிமுறைகளை தங்களின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை அமைப்புகள் தடையின்றி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவு, நாடு முழுவதும் உள்ள அரசு விதிகளில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.