Select Location
All Locations
State
Region
City / District
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தீவிர தாக்குதல்: துல்லிய தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா பதிலடி

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தீவிர தாக்குதல்: துல்லிய தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா பதிலடி

தெஹ்ரான்: ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நால்வர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமான தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ட்ரோன் கட்டுப்பாட்டு மையம் மற்றும் குவைத்தில் உள்ள அலி அல் சலீம் உள்ளிட்ட விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. வளைகுடா நட்பு நாடுகள் பலவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஈரானை கட்டுப்படுத்தும் வகையில், துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி ஈரானின் பல இடங்களில் தாக்குதல்களை நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் தென்மேற்கு ஈரானில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ஓமனில் உள்ள ரேடார் அமைப்புகளை அழித்ததாகவும், மனாமா நகரின் தெற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகளை தாக்கியதாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்தது. மேலும், பஹ்ரைனின் ஜுஃபைர் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகளைத் தாக்கியதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்தது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்ததால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை பல வாரங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, இன்று கச்சா எண்ணெய் விலை 4%க்கும் அதிகமாக உயர்ந்தன. பின்னணி என்ன? - அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்தது உள்ளிட்ட காரணங்களால், ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. ஒரு மாதத்துக்கு மேல் நீடித்த இந்த மோதல் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.

ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் குறிப்பிட்ட வழித் தடத்தில்தான் எண்ணெய்க் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும், ஓமன் கடற்கரை வழியாக கடந்து செல்லக் கூடாது என்று ஈரான் கட்டுப்பாடுகள் விதித்தது. ஈரான் உத்தரவை மீறி ஓமன் கடற்கரை வழியாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 எண்ணெய்க் கப்பல்களைக் கடந்த வாரம் ஈரான் தாக்கியது. இது அமைதி ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றுகூறி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் ஈரானின் 140 இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு 3-வது சுற்று தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதன் வளைகுடா நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News