வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க பெற்றோரின் எஸ்ஐஆர் விவரம் தெரிவிப்பது அவசியம்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோரின் எஸ்ஐஆர் விவரத்தை அவசியம் வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், படிவம் 6 உடன் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஆண்டு தொடங்கியது தேர்தல் ஆணையம். பல்வேறு கட்டங்களாக இந்தப் பணி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு முதல் கட்டமாக பிஹாரில் இந்தப் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. தற்போது மூன்றாவது கட்டமாக விடுபட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள், தங்களது பெற்றோரின் எஸ்ஐஆர் விவரத்தை அவசியம் வழங்க வேண்டுமென தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு பிஹாரில் எஸ்ஐஆர் பணி நடைபெற்ற போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்களை எளிதில் வகைப்படுத்தவும், புதிதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கூடுதல் கோப்புகளை வழங்குவது குறையும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.