Select Location
All Locations
State
Region
City / District
அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

முந்தைய திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைத் தொடர வேண்டும் என தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் முந்தைய திமுக அரசில் தொடங்கிய அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டுக் கிணறு, கட்டுமானச் சுவடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்விடத்தைப் பார்வையிட்டு, இந்த அகழாய்வுப் பணிகள் தொடர வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதனைப் பகிர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!

திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும். தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை! மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!

வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.


Dinamani 2 hours ago
Home Flash News