பதின் வயதினர் இரவு நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் பிரிட்டன்!
பதின் வயதினருக்கு இணையம் மூலம் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க பிரிட்டன் அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி, 16 மற்றும் 17 வயதுடைய மூத்த பதின் வயதினர் தாமாக முன்வந்து சமூக உடகங்களை இரவு நேரத்தில் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டது.
சமூக ஊடகங்களில் வரும் ரீல்ஸ் காணொலிகள் நீண்ட நேர பயன்பாடை ஊக்குவிக்கிறது. இந்தக் காணொலிகள் தொடர்ந்து ப்ளே ஆவது குறிப்பிட்ட வயதினருக்கு தானாகவே அணைக்கப்படும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். பதின்வயதினர் இதுபோன்ற அம்சங்களைத் விருப்பப்படி அணைத்து வைக்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை விதிக்கப்பட்ட ஒரு மாத காலம் கழித்து இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை வரும் காலங்களில் ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்படவுள்ளது. ஆனால் வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் போன்ற செய்திப் பரிமாற்றச் செயலிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் ஒன்றான இது சட்டமாக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவருக்குப் பின் பிரதமராக வாய்ப்புள்ள ஆண்டி பர்ன்ஹாம் இதைத் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டன் இணையப் பாதுகாப்பு அமைச்சர் கனிஷ்க நாராயண் இதுபற்றி கூறுகையில், “பதின்வயதினர், விருப்பத்தின் பேரிலான சமூக ஊடக தடையைத் தானாகவே முடக்குவார்கள் எனக் கூறுவது, அவர்களுக்குச் செய்யப்படும் ஒரு தீங்கைப் போன்றது” எனத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக, 300-க்கும் மேற்பட்ட பதின்வயதினரை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் இரவு நேரங்களில் சமூக ஊடகப் பயன்பாடு வியக்கதக்க அளவில் குறைந்து, தூக்கம் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவியதாக அவர் சுட்டிக்காட்டினார். இங்கிலாந்தின் குழந்தைகள் ஆணையர் ரேச்சல் டி சௌசா இதுபற்றிப் பேசுகையில், “இளைஞர்கள் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க விரும்பினாலும் அது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. அந்த வகையில் இது ஒரு நல்ல முன்னேற்றம். தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். இத்திட்டம் பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்ய அதைத் தொடர்ந்து கவனிப்பேன்" என்று அவர் கூறினார்.