லஞ்சம் வாங்கிய வீடியோ- வீரா தவெகவில் இருந்து நீக்கம்
லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியான நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெக.) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகவும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் வீரா. மாம்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நவீன் என்ற ஒப்பந்ததாரரால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவடைந்த பணிக்கான நிலுவைத் தொகையை (Bill Pass) விடுவிப்பதற்காக, ஊராட்சி மன்றத் தலைவர் வீரா ஒப்பந்ததாரர் நவீனிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் 'ஜிபே' (G Pay) மூலம் பெறப்பட்ட பண பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியான நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்த வீரா (எ) வீராசாமி இன்று முதல் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கப் படுகின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.