Select Location
All Locations
State
Region
City / District
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை திட்ட செலவை ரூ.600 கோடி வரை குறைக்க தொழில்நுட்ப குழு முடிவு

திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை திட்ட செலவை ரூ.600 கோடி வரை குறைக்க தொழில்நுட்ப குழு முடிவு

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் கட்டுமான செலவை குறைக்கும் வகையில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 13.3 கிலோமீட்டர் நீளத்தில், நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ள இந்த உயர்மட்ட சாலை திட்டத்தின் ஆரம்ப மதிப்பீடு சுமார் ரூ.2,100 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டச் செலவு அதிகமாக இருப்பதால் அதை ரூ.1,500 கோடி அளவுக்கு குறைக்கும் நோக்கில் அதிகாரிகள் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.600 கோடி வரை செலவை மிச்சப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய திட்ட வடிவமைப்பில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் வழக்கமான நடைமுறைகளை விட அதிக தரநிலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கட்டுமானச் செலவு உயர்ந்துள்ளது.

குறிப்பாக, தூண்களின் வடிவமைப்பு, அடித்தள அமைப்பு, சாலையின் அகலம், பயன்படுத்தப்படவுள்ள கட்டுமானப் பொருட்கள் மற்றும் பிற பொறியியல் அம்சங்கள் தேவையை விட அதிக செலவினத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், பாதுகாப்பு மற்றும் தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல், தேவையான இடங்களில் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து செலவைக் குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டத்தின் இறுதி வடிவமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும் இத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுவதால் மொத்த திட்டச் செலவில் இருந்து 25 முதல் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இதனிடையே, திட்டத்தில் முன்மொழியப்படும் புதிய மாற்றங்களை ஏற்கனவே ஒப்பந்தம் பெற்றுள்ள கட்டுமான நிறுவனம் ஏற்றுக்கொண்டால், திருத்தப்பட்ட வடிவமைப்பின் அடிப்படையில் அதே ஒப்பந்ததாரருக்கு கட்டுமான பணிகள் தொடர அனுமதிக்கப்படும். ஆனால், புதிய நிபந்தனைகள் அல்லது வடிவமைப்பு மாற்றங்களை ஏற்க ஒப்பந்ததாரர் விருப்பம் தெரிவிக்காவிட்டால், அந்த நிறுவனம் திட்டத்திலிருந்து விலகும் சூழலும் உருவாகலாம். இவ்வாறு அவர் கூறினார்.


24 News 48 minutes ago
Home Flash News