Select Location
All Locations
State
Region
City / District
சிக்கிமில் சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு - 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

சிக்கிமில் சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு - 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திங்கட்கிழமை (ஜூலை 20) அன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது சுரங்கப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலர் அதிலிருந்து தப்பிய நிலையில், சுமார் 27 பேர் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். அவர்களில் 21 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 6 பேர் தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் என்று தெரியவந்துள்ளது.

சுரங்கத்தின் உள்ளே சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் மீத்தேன் வாயு வெடித்த காரணத்தால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் அதன் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீஸ்தா ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்ட (6-ம் நிலை) பணிகள் நிமித்தமாக இந்த சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், விபத்தை அடுத்து அங்கு மீட்பு பணிகள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து நாம்ச்சி மாவட்ட ஆட்சியர் அனுபா தம்லிங் கூறியது: “சுரங்க விபத்து குறித்த தகவல் நேற்று பிற்பகல் 3.40 மணி அளவில் எங்களுக்கு கிடைத்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கியது. மீட்பு பணியில் ஈடுபடும் நபர்கள் தங்கள் பணியை தொடங்கினர்.

மொத்தம் 27 பேர் உள்ள சிக்கி இருப்பதாக தகவல். மீட்பு பணியில் பல்வேறு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சுரங்கம் குறுகலாக உள்ளது, போதுமான வெளிச்சமும் இல்லை. அதனால் மீட்பு பணியில் சவால் ஏற்பட்டுள்ளது. உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு முன்னுரிமை அளித்து, அதற்கான பணிகள் நடைபெறுகிறது. அதன் பின்னர்தான் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Hindu Tamil 6 hours ago
Home Flash News