மதுரவாயல் தொகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடவேண்டும் என போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: மதுரவாயல் தொகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை மூட போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் - அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள், வேலைக்குச் செல்வோர் என மக்கள் அதிகம் புழங்கும் இந்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்ற வேண்டும். நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டதாகக் கூறும் த.வெ.க. அரசு, நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாதது வேதனைக்குரிய விஷயமாகும். இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில், வரும் 27ம் தேதி காலை 10 மணியளவில், மதுரவாயல் பகுதி, நெற்குன்றம் சூ.கூ. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா தலைமையில் நடைபெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.